ஆலய வரலாறு
Temple History

மட்டக்களப்பு நகரின் மேற்கே ஊறணி எனப்படும் நீர்வளம் நிறைந்த அழகான கிராமத்தில் (ஊருணி எனும் காரணப் பெயரே பின்னாளில் ஊறணி என்று மருவியதாக முன்னோர்களால் அறியப்படுகிறது) அமையப் பெற்றிருக்கிறது அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்மன் தேவஸ்தானம். இவ்வாலயம் ஸ்தாபிக்கப்பட்ட சரியான காலப்பகுதி பற்றி ஆதாரக் குறிப்புகள் இல்லாவிட்டாலும் இக்கிராமத்தில் வாழ்ந்த முன்னோர்களுள் ஒருவரான அமரர் பொன்னையா (ஓலா பொன்னையா என்று அழைக்கப்பட்டிருந்தார்) அவர்களினால் தோற்றுவிக்கப்பட்டதாகவும், அவர்கள் வாழ்ந்த காலப்பகுதியை கணக்கிடும் பொழுது சுமார் 130 இலிருந்து 150 வருடங்களிற்கு முற்பட்ட காலத்தில் தோற்றம் பெற்றதாகவும் அறியக்கிடைக்கிறது.

பண்டையகாலத்தில் வேம்பு மற்றும் ஆல விருட்சங்களால் சூழப்பெற்ற இயற்கை வனப்பு மிகுந்த அமைதியான சூழலில் ஆலயமானது தென்னங் கிடுகுகளினால் அமைக்கப்பெற்றிருந்தது. ஊறணியின் பழமையைப் பறைசாற்றும் எச்சங்கள் தற்காலத்தில் காணக்கிடைக்காவிடினும் ஆலய வளாகத்தினுள் எஞ்சியிருக்கும் தேத்தா விருட்சம் குறைந்தது 150 வருடங்களாகவேனும் இருக்கும் என்பது இவ்வூரில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களினால் அறியக் கூடியதாகவிருந்தது. ஆலயத்திலிருக்கும் விநாயகப் பெருமான் அத் தேத்தா மரநிழலில் “கொம்புச் சந்திப் பிள்ளையார்” எனும் நாமத்துடன் அமர்ந்திருந்து அருள்பாலித்ததும் பின்னாட்களில் ஆலய உட்கட்டுமான விருத்திகளின் பின்னர் அன்னைக்கு அருகாமையில் எழுந்தருளப்பண்ணியமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஆலயம் தோற்றம் பெற்ற காலம் முதல் பத்ததி (பத்தாசி எனவும் அழைக்கப்படுகிறது) எனும் முறையல் வருடம் ஒருமுறை மாத்திரம் சடங்கு பூஜைகள் இடம் பெற்றன. எனினும் பிற்காலத்தில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் பூஜைகளுடன் விஷேட பூஜைகளான ஆங்கில புதுவருடம், தைப்பொங்கல், தைப் பூசம், மகா சிவராத்திரி, மாசி மகம், பங்குனி உத்தரம், சித்திரை வருடப்பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை, திருவெம்பாவை முதலாகியனவும் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன.

அன்னையினுடைய வருடாந்த உற்சவம் பத்து தினங்கள் பிரதி வருடம் தோறும் ஆடி மாதத்தில் நடைபெற்று ஆடிப் பௌர்ணமி தினத்தில் கும்பம் சொரிதல் (தீர்த்தோற்சவம்) எனும் இறுதி வழிபாடுகளோடும் அன்றிரவு ஆதி வைரவர் பூஜைகளோடும் நிறைவுபெறுவது பெரிய ஊறணியில் கோலாகலாமான நிகழ்வாகும். வருடாந்த உற்சவத்தில் கன்னிக்கால் வெட்டும் வைபவமும் கும்பச் சடங்கு மற்றும் தீச் சடங்கு என்பனவும் மிக விசேடமான பூஜை வழிபாடுகளாக இடம்பெறுகின்றன.

“கோயிலுக்கு வருவோம்” என்பது வெளிநாடுகளில், வெளியூரில் வசிக்கும் அல்லது தொழில் புரியும் இப்பகுதி மக்களின் வாக்காகும். வருடாந்த உற்சவ காலத்தில் ஊரில் அனைவரும் ஒன்றிணைவதும் அன்னையின் ஆலயத்தில் பிரசன்னமாவதும் சமூக ஒருங்கிணைப்பின் அடையாளமாகும். அன்னையின் ஆலயத்தையண்டிய அயற் கிராம மக்களும் அன்னையை தவறாது சேவிப்பதும் அரும்பணியாற்றுவதும் பெருவிழாக் காலங்களில் ஒன்றிணைந்து பங்களிப்புச் செய்வதும் விசேடமான அம்சமாகும்.

தற்காலத்தில் பிரதி ஆனி மாதந்தோறும் பூச நட்சத்திரமன்று நடைபெறும் சங்காபிஷேகம் சிறப்பானதொரு வழிபாடாகும். பெண்கள் பாற்குடமெடுத்து ஊர்வலம் வந்து அன்னைக்கு பாலாபிஷேகம் செய்வதும் அத்தோடு 1008 சங்குகளினால் அபிஷேக ஆராதனைகள் இடம்பெறுவதும் இவ்வாலயத்தில் நடைபெறும் விஷேட வழிபாடுகளுள் ஒன்றாகும்.

காலாகாலாமாக ஆலய பரிபாலகர்களின் அதீத முயற்சியினாலும் அன்னையடியவர்களின் பெருங்கொடைகளினாலும் ஆலயம் துரித வளர்ச்சியடைந்து அழகுற கட்டமைக்கப்பட்டது. கிராமத்தின் சமய, சமூக, ஆன்மீக அபிவிருத்தியில் ஆலய பரிபாலகர்களின் பங்கு முன்னிலை வகிக்கின்றது. பெரிய ஊறணி இந்து இளைஞர் மன்றத்தின் செயற்பாடுகளுக்கும், பாரம்பரிய கலை, கலாச்சார வளர்ச்சிக்கும், சமூக ஒருங்கினைப்பிற்கும், ஊரில் இடம்பெறும் அபரக் கிரியைகளுக்கும் கூட ஆலய பரிபாலகர்களது ஒத்துழைப்பும், சேவைகளும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

காலவோட்டத்தில் சகலமும் மாற்றம் பெற்றுக்கொண்டு வரும் இப்புதிய காலகட்டத்தில் அன்னையின் அன்பும்; தன்னடியவர்களின் நலன்பேணும் அம்பிகையின் அருட்கடாட்சமும் மட்டுமே என்றும் மாறாதது என்பதில் ஐயமில்லை. தன்னடியவர்களின் வாழ்க்கைப்போக்கில் பெரும் முன்னேற்றங்களை ஏற்படுத்தி அழகுபார்க்கும் அன்னை மாகாளியின் பெருங்கொடைக்கு ஈடிணையே கிடையாது என்றே கூறலாம். அன்னையை மனக்கண்ணால் காணும்போதே உடல் சிலிர்த்து கண்ணீர் அரும்பும் இறையுணர்வே அப்பகுதி வாழ் மக்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் எவ்வேளையும் ஏற்படாமையின் இரகசியம் என்பது ஊறணியாரின் ஐதீகமாகும்.

ஆலய பரிபாலன சபை
ஸ்ரீ பத்திரகாளியம்மன் தேவஸ்தானம், பெரிய ஊறணி, மட்டக்களப்பு
மார்கழி 2017

[மட்டக்களப்பில் பத்ததி முறையிலான கிராமிய வழிபாடுகள் குறித்து பேராசிரியர் கலாநிதி சி. மௌனகுரு (கிழக்கு பல்கலைக் கழகம்) அவர்களின் சிறப்புக் கட்டுரை]

பத்ததி – விக்கிபீடியா களஞ்சியம்

ஆலய வரலாறு குறித்த மேலதிக தகவல்கள் / புகைப்படங்கள் இருப்பின் அல்லது இவ்வரலாற்றில் திருத்தம் மேற்கொள்ள விரும்பின் பரிபாலன சபையை தொடர்பு கொள்ளுங்கள்.

Web site development and Content Management:
K. Thirukumaran
Secretary to the Temple Committee
secretary@sripathirakaliamman.org / ktkumaran@gmail.com